சென்னை: 'டேம் 999' படத்தில் இந்தியா மற்றும் தமிழகத்தில் உள்ள எந்த அணைகள் பற்றியும் நான் சொல்லவே இல்லை. இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம், என்று பல்டியடித்துள்ளார் மலையாள இயக்குநர் சோஹன் ராய்.
ஆனால், 999 என்ற பெயரே முல்லைப் பெரியாரைத் தான் குறிக்கிறது. தமிழகத்திடம் இந்த அணைக்கான 999 ஆண்டு உரிமை உள்ளது. இதைத் தான் படத்தின் டைட்டிலில் குறி்ப்பிட்டுள்ளார் ராய்.
ஆனால் முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டு, அதற்கு பதிலாக பெரிய அணை கட்டினால்தான் தமிழர்களுக்கு நிறைய தண்ணீர் கிடைக்கும் என்றும் அவர் சந்தடி சாக்கில் 'பிட்'டைப் போட்டு தனது உண்மையான நோக்கம் என்ன என்பதையும் அவரே வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். ஒரு சினிமாக்காரருக்கு அணை குறித்த பேச்சு எதற்கு என்ற கேள்வியையும் இவரின் பதில் எழுப்பியுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை உடைவது போல 'டேம் 999' என்ற ஆங்கிலப் படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது என்று செய்தி வெளியானதால், மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்று கூறி தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் படத்துக்காக நேற்று ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது. பிரசாத் லேப் இனி இந்தப் படத்துக்கு எந்த ஒத்துழைப்பும் தர முடியாது என்று கூறியுள்ளது.
'டேம் 999' படம், ஐக்கிய அரபு நாடுகளில் வியாழக்கிழமையும், இந்தியாவில் வெள்ளிக்கிழமையும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் எங்கும் இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இந்த நிலையில், டேம் 999 படத்தின் இயக்குனர் சோஹன் ராய் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழக மக்கள் அனைவருக்கும் உளப்பூர்வமான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது 'டேம் 999' திரைப்படம், தமிழக மக்களின் கலாசாரத்தையோ, உணர்வுகளையோ இழிவுபடுத்தக்கூடிய படம் அல்ல.
'டேம் 999' முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கபட்ட படம். சீனாவின் பாங்கியூ அணை 1975-ல் உடைந்ததால் ஏற்பட்ட பேரழிவில் சுமார் 2,50,000 பேர் பலியான சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது.
மக்கள் பலரின் வாழ்க்கையை ஓர் அணை பேரழிவின் மூலம் எப்படி மூழ்கடித்தது என்பதையை இந்தப் படம் எடுத்துரைக்கிறது. மாறாக, இந்தியாவில் உள்ள அணைகளைப் பற்றியோ, குறிப்பாக தமிழகத்தில் உள்ள அணைகளைப் பற்றியோ சொல்லவில்லை.
தமிழக மக்கள் மீது எனக்கு எப்போதும் பெருமதிப்பு உண்டு. அவர்களது கலாசாரத்தையும், உணர்வுகளையும் பாதிக்கும் எந்த செயலலிலும் எனக்கு உடன்பாடு இல்லை.
எனது 'டேம் 999' படத்தில், தமிழ் மக்களுக்கோ அல்லது தமிழகத்துக்கோ தவறான எண்ணம் ஏற்படும் வகையில் எந்த ஒரு வசனமும் காட்சியும் இடம்பெறவில்லை என்று உறுதிகூறுகிறேன். இந்தியாவில் உள்ள எந்த ஒரு அணையையோ அல்லது தமிழக அணைகளையோ இந்தப் படத்தில் நான் குறிப்பிடவே இல்லை.
தமிழக மக்களின் உணர்வுகளை 'டேம் 999' எந்த விதத்திலும் பாதிக்காது என்று என்னால் நிச்சயமாக சொல்லமுடியும். இது, உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சினிமா மட்டுமே என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
ஒரு நல்ல நோக்கத்துக்காகவும், விழிப்பு உணர்வுக்காகவும் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை தயவு செய்து தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழகத்தில் உள்ள மதிப்புமிக்க அரசியல் தலைவர்களுக்கு இந்தப் படத்தை பிரத்யேக காட்சி மூலம் திரையிட்டு காட்ட தயாராக இருக்கிறேன். அவர்கள் தவறானது எனச் சொல்லும் காட்சிகளையோ அல்லது வசனங்களையோ நீக்குவதற்கும் தயாராக இருக்கிறேன்.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தேவை என்பது எனது தனிப்பட்ட கருத்து. கேரளாவுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும் நிலையில், பழைய அணையை இடித்துவிட்டு, விரைவில் பெரிய அணை ஒன்றை கட்டுவதே இதற்கு தீர்வு. அப்போது ன், தமிழக மக்களுக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும்; கேரள மக்களின் வாழ்வாதாரமும் காக்கப்படும்," என்று கூறியுள்ளார்.
எந்த அணையைப் பற்றியும் குறிப்பிடவே இல்லை என்று சொல்லிவிட்டு, பின்னர் முல்லைப் பெரியாறு அணையை இடித்து புதிய அணை கட்ட வேண்டும் என்று கூறுகிறார் சோஹன் ராய். இதிலிருந்தே, அவரது நோக்கம் முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்பதே எனத் தெளிவாகியுள்ளது.
0 comments:
Post a Comment