Pages

Labels

Thursday, November 24, 2011

ராணா.. செட்டுகள் அமைக்கும் பணி தீவிரம்... வெளிநாட்டு பயணத்துக்கு ரஜினி ரெடி!

ரஜினி முழுமையாக குணமடைந்து பழையபடி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்துவிட்டதால் ராணா படப்பிடிப்புக்கான பணிகள் முழு வேகத்தில் தொடங்கிவிட்டன.

ரஜினியின் கனவுப் படம் எனப்படும் ராணா தொடங்கிய நாளிலேயே ரஜினி நோய்வாய்ப்பட்டார். இதனால் அந்தப் படத்தின் நிலை கேள்விக்குரியதானது.

அவர் சிங்கப்பூர் சென்று சிகிச்சைப் பெற்று உடல்நிலை தேறி வந்த பின்னும் ராணா ஷூட்டிங் உறுதியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் வரும் ஜனவரியிலிருந்து படப்பிடிப்பு தொடங்கும் என ரஜினியே சமீபத்தில் திருப்பதியில் அறிவித்தார்.

இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக வீட்டில் ஓய்வெடுத்து வந்த ரஜினி, இப்போது வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். கடந்த வாரத்தில் மட்டும் அவர் நான்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

ராணா படப்பிடிப்பு பணிகள் குறித்து இயக்குநர் கே எஸ் ரவிக்குமாருடன் கலந்து பேசிய ரஜினி, ஜனவரிக்குள் படத்தில் பணியாற்றும் அத்தனை கலைஞர்களும் தங்கள் கமிட்மெண்டை முடித்துக் கொண்டு ராணா செட்டுக்கு திரும்பிவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.

இதைத் தொடர்ந்து பெரிய செட்கள் அமைக்கும் வேலை ஹைதராபாத் ராமோஜிராவ் திரைப்பட நகரில் ஆரம்பமாகிறது. மேலும் வெளிநாடுகளிலும் இந்தப் படத்தின் பெரும்பகுதியை எடுக்க விருப்பதால், ரஜினி அதற்கான வேலைகளில் தீவிரமாகியுள்ளாராம். முதல்கட்டமாக பிரிட்டனில் படப்பிடிப்பு நடத்தவிருக்கிறார்களாம்.

துபாய் போகும் ஆர்யா - அமலா பால்!

மாதவன், ஆர்யா, சமீரா ரெட்டி, அமலா பால் நடிக்கும் வேட்டை படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது.

லிங்குசாமி இயக்க, அவரது சகோதரர் பொறுப்பில் உள்ள திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை யுடிவி நிறுவனம் வாங்கியுள்ளது.

தூத்துக்குடி, சாலக்குடி உள்ளிட்ட பகுதிகள் தொடர்ந்து 40 நாட்கள் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்போது அடுத்த கட்ட படப்பிடிப்பை துபாயில் நடத்துகிறார் இயக்குநர் லிங்குசாமி. இங்கு ஆர்யா - அமலா நடிக்கும் பாடல் காட்சி ஒன்று படமாகிறது.

இன்னொரு பாடலுக்காக ரூ 60 லட்சம் செலவில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் போடப்பட்டு படமாக்கப்படுகிறது.

யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் இசைவெளியீட்டு விழாவை வரும் டிசம்பர் 2-ம் வாரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அந்த டேமை சொல்லவில்லை- ஆனா முல்லைப் பெரியாறை இடிக்கணும்! - மலையாள இயக்குநரின் பல்டிசென்னை: 'டேம் 999' படத்தில் இந்தியா மற்றும் தமிழகத்தில் உள்ள எந்த அணைகள் பற்றியும் நான் சொல்லவே இல்லை. இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம், என்று பல்டியடித்துள்ளார் மலையாள இயக்குநர் சோஹன் ராய்.

ஆனால், 999 என்ற பெயரே முல்லைப் பெரியாரைத் தான் குறிக்கிறது. தமிழகத்திடம் இந்த அணைக்கான 999 ஆண்டு உரிமை உள்ளது. இதைத் தான் படத்தின் டைட்டிலில் குறி்ப்பிட்டுள்ளார் ராய்.

ஆனால் முல்லைப் பெரியாறு அணையை உடைத்துவிட்டு, அதற்கு பதிலாக பெரிய அணை கட்டினால்தான் தமிழர்களுக்கு நிறைய தண்ணீர் கிடைக்கும் என்றும் அவர் சந்தடி சாக்கில் 'பிட்'டைப் போட்டு தனது உண்மையான நோக்கம் என்ன என்பதையும் அவரே வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். ஒரு சினிமாக்காரருக்கு அணை குறித்த பேச்சு எதற்கு என்ற கேள்வியையும் இவரின் பதில் எழுப்பியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை உடைவது போல 'டேம் 999' என்ற ஆங்கிலப் படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது என்று செய்தி வெளியானதால், மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்று கூறி தீவிர போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் படத்துக்காக நேற்று ஏற்பாடு செய்திருந்த பத்திரிகையாளர் சந்திப்பும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக ரத்து செய்யப்பட்டது. பிரசாத் லேப் இனி இந்தப் படத்துக்கு எந்த ஒத்துழைப்பும் தர முடியாது என்று கூறியுள்ளது.

'டேம் 999' படம், ஐக்கிய அரபு நாடுகளில் வியாழக்கிழமையும், இந்தியாவில் வெள்ளிக்கிழமையும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் எங்கும் இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இந்த நிலையில், டேம் 999 படத்தின் இயக்குனர் சோஹன் ராய் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழக மக்கள் அனைவருக்கும் உளப்பூர்வமான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது 'டேம் 999' திரைப்படம், தமிழக மக்களின் கலாசாரத்தையோ, உணர்வுகளையோ இழிவுபடுத்தக்கூடிய படம் அல்ல.

'டேம் 999' முழுக்க முழுக்க உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கபட்ட படம். சீனாவின் பாங்கியூ அணை 1975-ல் உடைந்ததால் ஏற்பட்ட பேரழிவில் சுமார் 2,50,000 பேர் பலியான சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது.

மக்கள் பலரின் வாழ்க்கையை ஓர் அணை பேரழிவின் மூலம் எப்படி மூழ்கடித்தது என்பதையை இந்தப் படம் எடுத்துரைக்கிறது. மாறாக, இந்தியாவில் உள்ள அணைகளைப் பற்றியோ, குறிப்பாக தமிழகத்தில் உள்ள அணைகளைப் பற்றியோ சொல்லவில்லை.

தமிழக மக்கள் மீது எனக்கு எப்போதும் பெருமதிப்பு உண்டு. அவர்களது கலாசாரத்தையும், உணர்வுகளையும் பாதிக்கும் எந்த செயலலிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

எனது 'டேம் 999' படத்தில், தமிழ் மக்களுக்கோ அல்லது தமிழகத்துக்கோ தவறான எண்ணம் ஏற்படும் வகையில் எந்த ஒரு வசனமும் காட்சியும் இடம்பெறவில்லை என்று உறுதிகூறுகிறேன். இந்தியாவில் உள்ள எந்த ஒரு அணையையோ அல்லது தமிழக அணைகளையோ இந்தப் படத்தில் நான் குறிப்பிடவே இல்லை.

தமிழக மக்களின் உணர்வுகளை 'டேம் 999' எந்த விதத்திலும் பாதிக்காது என்று என்னால் நிச்சயமாக சொல்லமுடியும். இது, உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சினிமா மட்டுமே என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஒரு நல்ல நோக்கத்துக்காகவும், விழிப்பு உணர்வுக்காகவும் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை தயவு செய்து தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தில் உள்ள மதிப்புமிக்க அரசியல் தலைவர்களுக்கு இந்தப் படத்தை பிரத்யேக காட்சி மூலம் திரையிட்டு காட்ட தயாராக இருக்கிறேன். அவர்கள் தவறானது எனச் சொல்லும் காட்சிகளையோ அல்லது வசனங்களையோ நீக்குவதற்கும் தயாராக இருக்கிறேன்.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தேவை என்பது எனது தனிப்பட்ட கருத்து. கேரளாவுக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும் நிலையில், பழைய அணையை இடித்துவிட்டு, விரைவில் பெரிய அணை ஒன்றை கட்டுவதே இதற்கு தீர்வு. அப்போது ன், தமிழக மக்களுக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும்; கேரள மக்களின் வாழ்வாதாரமும் காக்கப்படும்," என்று கூறியுள்ளார்.

எந்த அணையைப் பற்றியும் குறிப்பிடவே இல்லை என்று சொல்லிவிட்டு, பின்னர் முல்லைப் பெரியாறு அணையை இடித்து புதிய அணை கட்ட வேண்டும் என்று கூறுகிறார் சோஹன் ராய். இதிலிருந்தே, அவரது நோக்கம் முல்லைப் பெரியாறு அணை இடிக்கப்பட வேண்டும் என்பதே எனத் தெளிவாகியுள்ளது.

'வொய் திஸ் கொலை வெறிடி'!

வேறு ஒன்றிமில்லை... இது தனுஷின் மனைவி ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் '3' படத்தில் தனுஷே பாடியுள்ள ஒரு பாடலின் ஆரம்ப வரி.

இந்தப் பாடல் மட்டும் நேற்று சென்னையில் வெளியிடப்பட்டது.

பாடலின் விசேஷம்... இது முழுக்க தமிங்கிலீஷில் எழுதப்பட்டிருப்பதுதான். எழுதிய பாடலாசிரியர் - தனுஷ்.

இந்தப் பாட்டு வெளியான கையோடு படு பாப்புலராகிவிட்டது. யு ட்யூப், பேஸ்புக் என சமூக வலை தளங்களில் சக்கைப் போடு போடுகிறது.

அனிருத் என்ற புதிய இசையமைப்பாளர் இசையில், தனுஷ் பாட, இடையிடையே ஸ்ருதி ஹாஸனும், ஐஸ்வர்யாவும் குரல் கொடுத்துள்ளனர்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளது. முதல் கட்டமாக இந்த ஒரு பாடலை மட்டும் வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா, மற்ற பாடல்களை அடுத்த விழாவில் வெளியிடுகிறார்.

மஸ்கட்டில் தேவா – எல் ஆர் ஈஸ்வரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

பிரபல இசையமைப்பாளர் தேவா மற்றும் பாடகி எல் ஆர் ஈஸ்வரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்குகிறது மஸ்கட் தமிழ்ச் சங்கம்.

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் சாதகப் பறவைகள் சங்கர் குழுவினர் நடத்தும் சிறப்பு இசை நிகழ்ச்சியில் தேவா மற்றும் எல் ஆர் ஈஸ்வரி பங்கேற்றுப் பாடுகிறார்கள். இவர்களுடன் கார்த்திக், சுசித்ரா, சைந்தவி உள்பட பிரபல பாடகர்களும் பங்கேற்கிறார்கள்.

தமிழ் சினிமா வரலாற்றில் மறக்கமுடியாத திரைப்பாடல்களை இந்த மேடையில் பாடுகிறார்கள்.

8000 ரசிகர்கள் அமரும் பிரமாண்ட அரங்கில் இந்த விழா நடக்கிறது. நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

ராணாவுக்கு முன் ரஜினி நடிக்கும் கோச்சடையான்... அவதார் ஸ்டைலில் 3 டி படம்!

ராணா படம் இப்போதைக்கு இல்லை என்பதை ஒருவழியா ரஜினி தரப்பில் அறிவிக்கப்பட்டுவிட்டது. 

ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்துக்கு கோச்சடையான் என பெயரிடப்பட்டுள்ளது. அவதார் பாணியில் 3டி முறையில் உருவாகும் இந்தப் படத்துக்கு கே.எஸ்.ரவிக்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதுகிறார்.

சௌந்தர்யா ரஜினி இயக்குகிறார். கேஎஸ் ரவிக்குமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார்.

கோச்சடையான் படத்தை அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளனர். கோச்சடையான் படம் முடிந்தபின் ராணாவில் ரஜினி நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் புதிய படத்தையும் ராணா தயாரிப்பாளர் ஈராஸ் மற்றும் மீடியா குளோபல் ஒன் நிறுவனங்கள் தயாரிக்கின்றன.